ஒரு ஏழையின் வீட்டுக்கு அருகில் ஒரு செல்வந்தன் வீடு இருந்தது. இருவரும் இணைபிரியாத நண்பர்கள். செல்வந்தனிடம் ஏராளமான பணமும் மற்றும் வீடு வாசல், தோட்டம் துறவு என சொத்துக்களும் நிறைய இருந்தன. ஆனால் அந்த செல்வந்தன் ஒருநாள் கூட மகிழ்ச்சியாக இருந்ததில்லை.
நண்பனை சந்திக்கும் போதெல்லாம், என்னால் ஒரு நிமிஷங்கூட மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் கவலையாகவும், கலக்கமாகவும் அல்லவா இருக்கிறது. நான் கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியுடன் இருக்க நண்பரே எனக்கு ஒரு யோசனை கூறக் கூடாதா ? என்று பரிதாபமாகக் கேட்டார்.
செல்வந்தன் ஒரு பெரிய பேழையில் தன்னுடைய பணத்தையெல்லாம் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்தான். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவன் அந்தப் பணப்பைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துப் பார்த்து வைப்பான்.
ஏழை நண்பன் அவன் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவனுடன் பொழுது போக்காகப் பேசிக் கொண்டிருந்து விட்டு வருவது வழக்கம். அன்றும் அவர் வழக்கம்போல செல்வந்தன் வீட்டுக்கு வந்தார்.
அந்தச் சமயத்தில் செல்வந்தர் பணப் பெட்டியைத் திறந்து பணமூட்டைகளை எடுத்துப் பார்த்து விட்டு வைத்துக் கொண்டிருந்தார். என்ன ஐயா செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டவாறு பணப்பெட்டி இருக்குமிடத்தை நோக்கி நடந்தார் அந்த ஏழை.
ஏழை நண்பர் வீட்டுக்குள் வருவதைக் கண்ட செல்வந்தன் அவசர அவசரமாகப் பணப் பைகளைப் பெட்டியில் வைத்துப் பூட்டத் தொடங்கினான்.
அப்போது அவனுடைய பணப் பைகளில் ஒன்று செல்வந்தன் அறியாமலே பணப் பெட்டிக்கு அருகாமையில் கீழே விழுந்து விட்டது. செல்வந்தன் அதைக் கவனிக்கவில்லை ஆனால் ஏழை நண்பர் கவனித்தார். உடனே அவர் பாய்ந்து சென்று பணப் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே ஒடினார்.
ஐயோ என் பணப்பை போய் விட்டதே என்று கூக்குரலிட்டவாறு அவரைத் துரத்திக் கொண்டு செல்வந்தன் ஒடினான். ஏழை நண்பர் இரண்டொரு தெருக்கள் வழியாக வேண்டுமென்றே ஒடினார். செல்வந்தன் பணம் போய் விட்டதே என்று கூக்குரலிட்ட வண்ணம் அவரைப் பின் தொடர்ந்து ஒடினான்.
ஏழை நண்பர் கடைசியாக செல்வந்தன் வீட்டுக்கே ஒடி வந்தார். பணப்பையை அவனுடைய பணப் பெட்டியின் மீது தொப்பெனப் போட்டார். செல்வந்தன் ஒடி வந்து பணப் பையைத் தூக்கிக் கொண்டு அப்பாடி இப்பொழுது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற மலர்ந்த முகத்துடன் கூறினான்.
இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா ? என்று எங்கிருந்து வந்தது இந்த மகிழ்ச்சி என்று அந்த ஏழை நண்பர் கேட்டார்.
இப்போது உங்கள் பணம் சிறிது கூட அதிகரிக்கவில்லை இருந்தாலும் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். உங்கள் மகிழ்ச்சி உங்களிடமே இருக்கிறது அதை யாரிடமிருந்தும் நீர் பெறமுடியாது என்றார்.

No comments:
Post a Comment